வீரம்

அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே

சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...

நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!

புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?

மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு

தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்

தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!

தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!

தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!

இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!

அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா

பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?

தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்

காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்

ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!

சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!

பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!

திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!

விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!

ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...

தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!

தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே

சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?

கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்

நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!

கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!

திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!

ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி

ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி

மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்

தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!

வேறு

கேட்பீர் தமிழ் மக்காள்... விதிக்
கிழவி மிகக் கொடியாள்!
ஆட்சி தர மறுப்பாள்! உமை
அலைப்பாள்! துயர் கொடுப்பாள்!
நாட்கள் சில போனால் இவள்
நலிவாள்... உடல் மெலிவாள்!
மிட்சி வருமொரு நாள்.. அது
வரைக்கும் இவள் திருநாள்!

வையம் பெறும் இன்பம் ஒரு
வல்லோன் கொடை யாகும்!
தெய்வம் ஒரு நாளும் அட
தீங்கிழைப்ப தில்லை!
எய்தும் துய ரெல்லாம் விதி
இவளின் விளையாட்டே!
ஐயம் இதில் வேண்டாம்... இறை
ஆற்றல்தனை யுணர்வீர்!

ஆண்டிலொரு நூறா? இலை
அதிலே ஒரு பாதி
தாண்டு முனம் தமிழர்க்கொரு
தனிநா டுருவாகும்!

ஈண்டிதனை இறைவன் உமக்
கெடுத்தருளச் சொல்லி
வேண்டின தால் செப்புகிறேன்..
விடுக துய ரென்றான்!

காலமுனி உரைத்தான்! படை
மறவர் களிப் புற்றார்!
நீல நெடு வானம் வரை
பாய்ந்தார் நிலம் வீழ்ந்தார்!

நாலுதிசை யதிரக் கரம்
அடித்தார்! நகை வெடித்தார்!
கோல முகம் படைத்தார்! முனி
குளிர்ந்து மொழி தொடர்வான்...

பூத்த மரம் போல் விளங்கும்
புதிய தமிழ்க் குலமே!
காத்திருந்து கனி பறிப்பீர்...
அதுவரைக்கும் இமைகள்
சாத்தி உறங்காதீர்! படை
வரிசை சரி பார்ப்பீர்!

கூத்து வருமொரு நாள்.. உயிர்
கொடுத்து முடி கொள்வீர்!

போர் நாள் வரு முன்னே... இடை
நாளில் தமிழ் மண்ணில்
கூர் வாளிலும் கொடியோர் சிலர்
குடி கொன்றிடப் பார்ப்பார்!
சோர்வால் மனங் குலையா நிலை
கொண்டே செயல் புரிவீர்!
ஓர் நாள் வரும்... அந்நாள் தமிழ்
உய்யுந் திருநாளே!

சாதி யெனுந் தீமை... மதச்
சண்டை தலை தூக்கும்!
வீதி குடி ஊர்களென
வேற்றுமைக ளோங்கும்!
நீதி நெறி சொன்ன தமிழ்
நிலம் இழிவு தேடும்!
மோதி விதிக் கிழவி செயல்
வென்று முர சார்ப்பீர்!

பிச்சை யுண வொன்றே பெரி
தென்பான் வயிறுடையான்!
எச்சில் வரு மெனினுந் தமிழ்
இனத்தை விலை வைப்பான்!
நச்சு மகன் குடி கேடன்
நன்றியிலாப் பாவி..
உச்சி பிளந்திடுவீர்! இவன்
ஒழிந்தால் விடிவுண்டே!

தீனி முத லென்பான் வயி
றுடையான்! இவன் தோழன்
ஈன மகன் தன்ன லத்தான்
இனத்தை மதிப்பானா?
தா னுயர்வு பெறுவதெளில்
தாள் பிடித்து நிற்பான்!
மானம் விலை வைப்பான்! இவன்
மனைவியையும் விற்பான்!

இழிவுடையான் தன்னலத்தான்
எதுவரினும் அஞ்சான்!
அழிவு தமி ழினமடைய
அத்தனையுஞ் செய்வான்!
மொழியினிலு மழகு தமிழ்
மொழி மறந்த கொடியன்!
குழி நெருப்பில் இவனுடலகம்
கொடுத்து வெறி கொள்வீர்!

என்றுரைத்தான் காலமுனி
எனது முகம் பார்த்தான்...
நன்று கவிக் குழந்தாய்... ஒரு
நாடமைக்க எழுந்தாய்!
இன்றுவரை தமிழ்ப்புலவன்
ஏடெழுதிக் கெட்டான்!
உன்றனைப் போல களத்திலெவன்
உலவியவ னென்றான்!

ஏடு படைக் கின்ற குலம்
இனிய தமிழ் மொழிக்குக்
கேடு படைப்போ ரதிரக்
கிளர்ச்சி செயும் பொன்னாள்
நாடு படைக் கின்ற திரு
நாளென நான் மொழிவேன்
ஓடு படையோடு புறம்
உணர்ந்த மறத்தமிழா!

நாள் கனியும் நாள் கனிய
மனங்கனியும் நாட்டில்!
வாள் மறையும்! போர்க்கருவி
கொலை மறையும்! அன்பே
தோள் கொடுக்கும்! தமிழ்ச்சாதி
அறஞ் சுமந்து வெல்லும்
ஆள்பவராய்த் தமிழினத்தார்
ஆவது மெய் யறிமின்!

என மொழிந்து காலமுனி
இருகரமுந் தூக்கி
புனல் பொழிந்த தென இதழில்
புது முறுவல் சிந்தி
இனியபடி வாழ்த்தி வெளி
ஏற்றி வழி விட்டான்...
முனிவரனின் அடிதொழுது
முழங்கு படை பெயரும்....

கால முனிவன் கூற்று

எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!

மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்

எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?

பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!

தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்

தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு

மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி

வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!

செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!

பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!

உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!

நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!

முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்

அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...

பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்

இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!

வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு

நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்

வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று

பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!

இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்

மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்

சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்

புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!

முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை

நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!

அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்

என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...

இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்

அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!

தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*

ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!

கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்

புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!

விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....

எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...

கால முனிவன் குடில்

யானும் தானையும் மாமலை காடுகள்
யாவும் கடந்து நடை நடந்து
வானில் முகில்கள் அலைந்தன போலிந்த
வையத் திசைகள் அலைந்து வந்து
பேனும் அழுக்கும் பிடித்த தலையொடு
பிணத்தின் நிலையில் முகங்கறுத்து
மான உணர்வில் மறுபடியும் பல
மலைகள் வழியே நடைதொடர்ந்தோம்.

வீர மிருந்தும் வெறியிருந்தும் பகை
வெட்டி வீழ்த்தஓர் படையிருந்தும்
தூர நடந்தும் முழுக்கமிட்டும் மலைத்
தோள்களிரண்டும் துடிதுடித்தும்
போரை நடத்தி முடிக்க எமக்கொரு
பொழுது வரவில்லை... என்ன செய்வோம்?
ஆரை நினைத்தழுவோம்? கொடும் ஊழ்வினை
அதனை நினைத்துப் புலம்பி நின்றோம்!

விழிகள் இரண்டிலும் நீர் வடியும்! என்றன்
வெந்த மனத்தில் நெருப்பு வரும்!
மொழிகள் அழுவது போலவரும்! பெரு
மூச்சுக்கள் ஆயிரம் ஓடிவரும்!
இழிவு சுமந்த தமிழினத்தின் துயர்
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?
அழிவு வருமெனினும் பொறுப்போம்... இந்த
அலைச்சல் நிலைமை எவர் பொறுப்பார்?

தொடையை அடித்திட்டார்! பல்கடித்தார்! சிலர்
சோர்ந்து மரத்திலே சாய்ந்திருந்தார்!
படையில் அவ்வேளை ஒருவன் துடிப்பொடு
பக்கத்திருந்த நெடும்புதரின்
இடையில் விரற்குறி காட்டிநின்றான்! அந்த
இடத்தில் ஒரு குடில் கண்டுவிட்டோம்!
அடையத் துடித்தார் தமிழ்மறவர்... அட
அங்கோர் புதுவெறி வந்ததடா!

துள்ளி நடந்தன கால்கள்! குடிசையின்
தூய கதவம் அடைந்து விட்டோம்!
உள்ளம் சிலிர்க்க நிலை மறந்தோம்! குடில்
உடையானடிகள் வணங்கி நின்றோம்
கள்ளின் வெறிபடைத் தாடினோம்! இங்குள
கடவுளர் யாவர்? என மொழிந்தோம்!
வெள்ளைச் சிரிப்பொடு கால முனிவரன்
விழிகள் திருப்பி மொழிதலுற்றான்.

குழப்பம்

காசி ஆனந்தன்
கோடித் தடந்தோளாம்! அங்கே
குன்றமொரு குவையாம்!
ஆடி வருங் கடல்கள் - களத்தில்
ஆயிரம் ஆயிரமாம்!

விழியும் நெருப்பு மொன்றே! - மறவர்
விரைவும் புயலுமொன்றே!
மொழியும் இடியுமொன்றே! - வெம்போர்
முனையை எதுமொழிவேன்?

உள்ளம் மலைக்குவமை! - அங்கே
உடல்கள் புலிக்குவமை!
வெள்ளம் படைக்குவமை! - மறவர்
வெறிக்கும் உவமையுண்டோ?

மெய்கள் சிலிர்த்திடவே - வீரம்
மிளிர்ந்த களப்புறத்தில்...
ஐயோ! ஒரு நொடியில் - நிகழ்ந்த
அழிவை எதுபுகல்வேன்?

கூனல் விதிக்கிழவி - பாவி
கொடுமை இழைத்தனளோ?
மான மறத்தமிழன் - அடடா
மதியை இழந்தனனோ?

என்ன மொழி யுரைப்பேன்? - இந்த
இழிவின் நிலை சிறிதோ?
தென்னர் படைக்குவியல் - களத்தே
சிதைந்து குலைந்ததடா!

பார்ப்பான் மிகவுயர்ந்தோன்...- அவனே
படையை நடத்திடுதல்
சேர்க்கும் பெருமையென்றான் - ஒருவன்
சின்னச் செயல் புரிந்தான்!

ஓங்கி வளர்ந்த மரம் - காற்றில்
உடைந்து விழுந்தது போல்
ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்
ஆனார் நொடியினிலே!

ஆதிப் புகழுடையோர் - உழவர்
என்றார் சிலர் அடித்தே!
சாதிக் கொடுமையடா! - இதுதான்
சனியன் எனும் பொருளோ?

செம்படவன் குதிப்பான்! - ஆங்கே
செட்டி செருக்குரைப்பான்!
கும்பம் சரிந்ததுபோல்.... தமிழர்
கூட்டம் சிதைந்தடா!

கண்கள் அனல் சுழற்ற - நெஞ்சம்
காய்ந்து சருகுபட
விண்ணில் இடிசிதற - நானோ
வேதம் முழக்குகின்றேன்.

நீயா தமிழனின் பிள்ளை?

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

படை இளைப்பாறல்

மலைமீது மாலைசாய்ந் தாற்போல்
மழை மேகம் இறங்கினாற் போல்
மலை நின்ற சோலைக் குள்ளே
மாவீரர் இருக்கை கொண்டார்!
மலை தாவி நடந்து வந்த
மயக்கத்தி லுறக்க மென்றோர்
மலையேறி விழுத லுற்றார்....
மரணம்போல் துயிலுங் கொண்டார்!

தானைதான் உறங்கி நிற்கும்...
தமிழ்வீரம் உறங்கிப் போமா?
மானத்தில் வளர்ந்த வீரர்
மலைத் தோளின் அழகு பார்த்தும்
வானையே ஒத்த மார்பின்
வடிவினைப் பார்த்து மங்கே
நானொரு மனிதன் மட்டும்
நனிதுயில் மறந்து நின்றேன்!

எழில்பூத்த மலர்ச்சோ லைக்குள்
இருளோடி மறையும் வண்ணம்
ஒளிபூத்த தென்ன வானில்
ஓவிய நிலவு தோன்றி
விழிபூத்த நிலையில் நானோ
வெறிபூத்த மனித னானேன்...
களிபூத்த நெஞ்சி னோடு
கால் போன போக்கில் போனேன்...

பொன்மழை பொழியும் வண்ணப்
புதுநிலா வானின் மேலே
என்னையும் இழுக்கும்... கால்கள்
இயலாமல் நிலத்தில் நிற்கும்!
மென்மலர் பூத்த பொய்கை
மேலெழுந் தாடும் வண்டின்
இன்னிசை நிலத்தின் மேல் நான்
இருப்பதே சரியென்றோதும்!

ஒப்பிலா அழகில் பூத்த
ஒளிக்காட்டில் கவிஞ னென்னை
இப்படிக் கொணர்ந்த நெஞ்சம்
இளமையில் தோய்ந்த நெஞ்சம்
அற்புதங் காட்டி வைக்க
அழைத்தது போலும்... ஆமாம்
செப்பவும் முடிய வில்லை
செந்தமிழ்க் கவிதை சொல்வேன்...

அழகடா அழகுக் கோலம்!
அவள் கோலம் அமுதின் கோலம்!
தழலிலே வெந்த கட்டித்
தங்கத்தின் புதிய கோலம்!
பழகவோ எதிரே வந்தாள்...
பைந்தமிழ்க் கன்னிப் பாவை?
நிழலிலே ஒதுங்கி நின்று
நெஞ்சத்தை அருகில் விட்டேன்...

கூனுமா தமிழன் வீரம்?

தூற்றினார் தமிழை என்னும்
துடித்திடும் சேதி கேட்டு
மாற்றலர் மண்ணில் பாய்ந்து
மானத்தைக் கல்லாய் மாற்றி
ஏற்றினான் சேரன் ஆங்கே
எதிரியின் தலைமீ தென்ற
கூற்றினைக் கேட்ட பின்னும்
கூனுமோ தமிழன் வீரம்?

பறித்திடத் தமிழன் மண்ணைப்
பரங்கியர் வந்த வேளை
தறித்தவர் தலைகள் கொய்து
தன்வலி காட்டி நின்ற
மறப்புலித் தேவன் வீரன்
மரபினில் வந்த நம்மோர்
துரத்துது குண்டென் றாலும்
துணிவிழந் தோடுவாரோ?

உற்றசெந் தமிழி னத்தை
ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகை முனுவின் கொட்டம்
தூள்படச் செய்வே னென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
கைதனில் வாள்பிடித்த
கொற்றவன் எல்லாளன் தன்
கூட்டமோ அடிமையாகும்?

மொழி நிலம் தமிழச்சாதி
மூன்றையும் இன்னல் வந்து
தழுவுமா? தழுவ வந்தால்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்!
வழிவழி வந்த வீரம்
வருவதை ஒருகை பார்க்கும்!
எலிகளும் தமிழர் மண்ணில்
எழும்! பகை ஓட்டி வைக்கும்!

விடியும் வரை

அதிகம்

தேடல்