எழுச்சி

தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!

தமிழன் கனவு

பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!

தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்

கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்...

கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும்.... போதாதோ?

ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய

மேவியவன் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்

நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து

மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!

தமிழ்மேல் ஆணை!

தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை!

உணர்ச்சி

என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி
சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி
என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!
பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே
சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்.. அட மாற்றார்
கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!
நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே
கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!
புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?
தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே?

காலையும் களமும்

கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!

சீறி எழுந்திடடா!

முத்தமிழ் மன்னர்கள் ஆண்ட தமிழ்நிலம்
மூக்கறு பட்டதடா! - சுய
புத்தி இழந்தவர் ஆட்சியிலே தமிழ்
பொத்தென்று வீழ்ந்ததடா! - அட!
எத்தர்கள் சட்டம் எழுதி அனுப்பிய
இந்தி நுழைந்ததடா! - இனிச்
செத்து மடிவதும் வாழ்வதும் ஒன்றுதான்!
சீறி எழுந்திடடா!

தங்கம் இருக்கையிலே தெருக் கற்களைத்
தாலிக்கு வைப்போமோ? - ஒளித்
திங்களை விட்டிங்கு மின்மினிப் பூச்சியின்
தேகத்தை வாழ்த்துவமோ? - அட
பொங்கும் அழகுத் தமிழை மறந்தொரு
பொய்யை வணங்குவமோ? - உடல்
அங்குலம் அங்குலம் ஆயினும் வெங்களம்
ஆடப் புறப்படடா!

என்ன நினைப்பில் துணிந்துவிட்டார்? இவர்
இப்படிச் செய்து விட்டார்! - நமைச்
சின்னவர் என்று கருதிவிட்டா ரெனில்
செய்கை பிழைத்துவிட்டார்! - அட!
அன்னை மொழிக்கொரு தீங்கெனில் இங்கவர்
ஆட்சி நடைபெறுமோ? - ஒளி
மின்னல் முகில் இடி என்ன வரும்படை
மீண்டும் அமைத்திடடா!

சட்ட வடிவினள் இந்தி சடலத்தின்
சாம்பல் கரைத்திடுவோம்! - சிறைக்
கட்டை உடைத்துக் களம்புகுந் தாடுவோம்!
காற்றில் வலம் வருவோம்! - அட!
கொட்டு முரசொடு வான்புகழ் கொண்டவர்
கூனி மடிவதோடா? - இமை
வெட்டும் ஒரு நொடி வேளையிலாயிரம்
வீரம் விளைத்திடடா!

வீரத்தாய்!

தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!

விழா

முத்து நிலாப்பொழியும் முற்றம் நெடுந்தொலைவில்
கத்துங் குயிலின் கனிப்பாடல்
குத்து
விளக்கெரியும் வண்ண விழாமேடை! ஆங்கே
உளக்கனியில் தேன்கொண்ட ஊர்!

வெள்ளி ஒளித் தூண்கள்! மேலே மணிக்கூரை!
கொள்ளை அழகு நிறைகோவில்!
உள்ளே
இருக்கை பசும்பொன்! எழில்சேர் இரவின்
திருக்கோலம் வேறு சிறப்பு!

தங்க நகையாள் தமிழ்க்கன்னி தேன்பாவை
பொங்க இருந்தாங்கே பூக்கின்றாள்!
திங்கள்
ஒளிநலமும் தென்றல் உணர்த்தும் நலமும்
களிக்கின்றாள்... ஓவியங் காண்!

நீல நெடுவானம் எங்கும் கொடிநிரைகள்!
கோலமொழி மகளின் கொண்டாட்டம்!
காலமுனி!
ஆங்கு விழாக் காணும் ஐயன் இதழ்முறுவல்
தாங்கும் அழகோ தனி!

மரகதம்சேர் வண்ண முடிசுமந்து மக்கள்
திரளிடையே வாழ்கின்றாள் தேவி!
கரமிசை
செங்கோல் சுமந்து சிரிக்கின்றாள்... ஞாலத்தே
பொங்கும் மகிழ்ச்சிப் புனல்!

பவள இதழ்கள் பளபளக்கும்....! ஆசை
தவழ ஒரு முறுவல் தாவும்!
இவளேன்
விழியாலே என்னை வெறிக்கப் பார்க் கின்றாள்?
அழியாத காதல் அழகு!

கோமே தகத்தின் குளிர்ந்த ஒளிகொண்டாள்!
நாமீதி லாடும்எழில் நங்கை!
பூமூடும்
தேனாகி நிற்கின்ற தேவி அருந்தமிழே
நானாகி நிற்கின்றேன் நான்!

வைர நெடும்போர் ஆடி உடல்வளைந்து
மையின் தலைநரைத்த மானிடன்
செய்ய தமிழ்ப்
பாவலன் பெற்ற பசுங்காதல் ஓவியமே!
தேமொழியே வாழ்க திகழ்ந்து!

பெருமூச்சு

வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?

வெற்றி விழா

முரசுகள் அதிர்ந்தன கேண்மினோ! கேண்மின்!
முழங்கின ஊதுகுழல்!
புரவிகள் ஆடின காண்மினோ! காண்மின்!
பொழிந்தன தமிழ்ப்பாடல்!
நிரை நிரை காவடி நிறைந்தன கண்டீர்!
நிகழ்ந்தன நடனங்கள்!
அரசொடு தமிழகம் மலர்ந்தது கண்டார்!
அனைவரும் மகிழ்கின்றார்!

தூயவெண் சங்குகள் கூவின! கூவின!
தோன்றின கவிதைகள்!
ஆயிரம் வகை வகை வீணைகள் ஆர்த்தன!
அதிர்ந்தன வேட்டுக்கள்!
தாயகம் தனியரசானது! தேனிசை
தவழ்ந்தது காற்றெல்லாம்!
சேயிழை தமிழ்மகள் வாய்மலர் இதழ்களும்
சிரித்தன சிரித்தனவே!

நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன!
குடிசைகள் நீங்கினவே!
நாள்தொறும் வாடிய ஏழையர் பூமுகம்
நகைத்தன! நகைத்தனவே!
ஆள்பவர் அடிமையர் உள்ளவர் அற்றவர்
ஆகிய பேதங்கள்
தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை
பறவைகள் துள்ளுதடா!

பனிமலர் புகைப்பொருள் சந்தனம் மணந்தன!
பாவையர் எழில் காட்டும்
கனிவகை பாலொடு சர்க்கரை கரும்புகள்
இனித்தன வாயெல்லாம்!
தனியெழில் கொண்டது தமிழகம்! பந்தல்கள்
தாங்கின வீதிகளை
மனிதரின் திரள்நிறைக் கின்றதால் ஊர்மிசை
வீதிகள் மறைந்தன காண்!

கோயில்க ளெங்கணும் மணியொலி கொஞ்சின!
தமிழ்மனம் குளிர்ந்ததடா!
போயின ஊர்வலம்! வீடெலாம் பொன்விழா!
பூத்தன நிறைகுடங்கள்!
ஆயிரம் எழில்வகை! விடுதலை நாளெனில்
அழகொரு காட்சியன்றோ?
வாயிதழ் எங்கணும் வாழ்த்தொலி நின்றது!
வாழிய தமிழ் நாடே!

விடியும் வரை

அதிகம்

தேடல்