தமிழ் கன்னி காதல்

வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்...
மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும்
பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ?
ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்?
காத லுருகிவரும் காலத்தில் வாய்மழலை
பாதிவரும் மீதி பதுங்கிவிடு மென்பார்கள்!
ஆனாலும் பொல்லாத ஆசையினால் நானொருத்தி
ஏனோ புதுவிதமாய் இன்று புலம்புகிறேன்!
திட்டமிட்டுப் பேசத் தெரிந்தவள்போல் பேசுகிறேன்!
கொட்டி முழக்கும் கடல்போலக்கூவுகிறேன்!
வண்ணக் கவிஞன் வலக்கரத்தில் நான்கிடந்து
கண்மயக்கம் கொண்டு கதைபேசுங் காலமிது!
நெஞ்சிற் கவலையில்லை! நீலக் கருவிழிகள்
கொஞ்சும் ஒளிமுகமும் கூராயொரு மூக்கும்
ஏலேலோ போடும் இதழ்ப்படகும் கொஞ்சம்போல்
மேலே விழுந்திருக்கும் மீசைக் கருப்பழகும்
பட்டினியால் சோர்ந்தாலும் பார்க்கப் பிடிக்கின்ற
கட்டழகு மார்பும் கவிஞனிடங் காண்கின்றேன்!
வானத் தளவு வளர்ந்திருக்கு மென் றலைவன்
மானத்தின் தோளில் மலர்க்கொடிபோ லாடுகிறேன்!
பாவை எனக்கென்ன பஞ்சம்? எனினுமொரு
தேவை யுரைப்பேன் தெரியாதா மன்னவனே...?
விண்ணின் கதிர்வெடித்து வீழ்ந்த சிறுகோளம்
தண்ணென்று மாறித் தரைபிறந்த காலத்தில்
முன்னம் பிறந்த முதல்மனிதன் வீட்டினிலே
கன்னி பிறந்தேன்.. பிறந்துவந்த காலமுதல்
நாலு திசையும் எனக்கிருந்த நல்லபுகழ்
காலம் அறியும்! வரலாறு கண்டறியும்!
செப்பேடறியும்! செதுக்கி வைத்த கல்வெட்டில்
எப்படியு மிந்த எழில்மகளின் பேர்விளங்கும்!
தென்னன் மதுரை சிறப்புடைய வஞ்சிநகர்
பொன்னி நதிபாயும் புகார் நகரம் ஈழநகர்
ஆன தமிழ்நாட்டின் அரசிநான் ஆனாலும்
சிந்து வெளிப்பரப்பும் சிறிக் கடல்பறித்த
தென்குமரி மண்டலமும் தேடிப் புதைபொருளின்
தன்மை அறிந்தவர்கள் இந்தத் தரை முழுதும்
என்னுடைமை என்றே எடுத்துரைப்பர்! முன்பெல்லாம்
மன்னரணி மாடத்தில் மாபுலவர் கூடத்தில்
சொங்கோ லிருந்த சிறப்புடைய மாளிகையில்
தங்கி யிருந்தேன்! தலைவிதியோ மன்னவரே...
பொத்தென்று வீழ்ந்தேன்...! புகழ் கெட்டுப் போனேனே!
கொண்ட முடியிழந்து கோல வடிவிழந்து
பண்டைச் சுகமிழந்த பாவி எதுசெய்வேன்?
நாலுபேர் பார்த்து நகைப்பதற்கு ஊராரின்
கேலி உரைக்கும் கிளிப்பிள்ளை என்செய்வேன்?
என்னால் வயிற்றுணவு தேடு மெழுத்தாளர்
என்னையே விற்றுப் பிழைக்கும் இழிநிலையில்
ஆரிடம்போய்ச் சொல்லி அழுவேன்? தமிழினத்தில்
வேறிடம் நான் போனாலும் வெட்கமிலாப் பாவிகள்
பிச்சையிடும் மாற்றாரின் பின்னால் அடிசுமந்து
கச்சையிலார் போலக் கடுகளவும் மானமின்றி
நாட்டை அடகுவைத்தும் நாலுநாள் சோற்றுக்கு
காட்டிக் கொடுத்தும் கதை நடத்தும் காலத்தில்
எங்க நான் போவேன்...? எளிய தமிழ்ச் சாதி
நூறுவகைச் சாதி நொடிக்கோர் புதுச்சாதி
வேறாய் உருவாக்கி வெவ்வேறாய் மோதுண்டு
தானே அழிந்து தலைசாயும் இந்நாளில்
எங்குநான் போவேன்? எதிர்கால மொன்றில்லாப்
பெண்ணின் நிலையேனோ பெற்றுவிட்டேன்... நான் பொழியும்
கண்ணீர் நதிக்குக் கரையொன்று தேறாதா?
என்றுநான் ஏங்கி யிருக்கையிலே பூமலரும்
குன்றத்தில் வந்தீர்... கொடுத்துவைத்தேன், பொய்யில்லை!
வானமழை பார்க்கும் வயலுழவர் கண்ணெதிரே
போனமழை போலப் புறப்பட்டு வந்துள்ளீர்!
வண்ணக் கரத்தால் வளைக்கின்றீர்... ஏழையின்
எண்ணம் பலிக்காமல் என்செய்யும்? நாளைக்கே
கோல முடிபெறுவேன்.. கொண்ட பழம்பெருமை
மீளப் பெறுவேன்... மிகப் பெரிய மண்பெறுவேன்!
இல்லையா மன்னவரே? என்றாள் தமிழ்க்கன்னி!
முல்லைச் சிரிப்பொன்றை மூடித் திறந்து வைத்தாள்!
நெற்றிப் பிறையின் கீழ் நின்ற புருவத்தைச்
சற்று வளைத்தாள் சரிந்த தலையோடு
காதல் விழியிரண்டில் கைபொருத்திக் கூப்பிட்டாள்!
சேதி தெரிந்து சிறகடித்து நான் போனேன்!
என்கரத்தி லாடும் இவளருகில் இன்னும்நான்
உன்னிப் பறப்பதெனில் உள்ளுணர்வே காரணமாம்!
போதை யுலகம்... புலவனுக்குப் பொன்னுலகம்
வாதை யுலகம் வலம்வந்த வேகத்தில்
கூடல் மகளின் கொதிக்குமுடல் சூட்டினிலும்
வாடும் அவளின் வரலாற்றுச் சூட்டினிலும்
நானொருவன் சூடாகி நல்ல வெறிபடைத்து
தேனமுத மங்கை தமிழ்க்கன்னி என்னுடையாள்
பட்ட துயரம் பறக்க இடிமுழக்கம்
கொட்டி நெடுவான் குலைந்து முகிற்கூட்டம்
ஓசைப் படவும் உலகம் நடுங்குறவும்
ஆசைத் தமிழ்மேல் ஆணை யுரைக்கின்றேன்...

தமிழ்க் கன்னி தோற்றம்

எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்...
என்ன புதுமையடா! - அட
புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே
போடும் ஒலியிவளோ? - வந்து
கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்
காட்டும் புதுக்கூத்தோ? - அட
முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு
மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்
மக்கள் உறவுடையாள்! - நல்ல
செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்
சிரிக்கும் அழகுடையாள்! - சிறு
கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்
காதல் வடிவுடையாள்! - தமிழ்
என்னு மினிய பெயருடையாள்! - இவள்
என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்
மூப்பு வரவில்லையே! - மணச்
சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்
சாயல் கெடவில்லையோ! - அட
விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்
விழிகள் சுழலுதடா! - கவி
தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்
தன்னைத் தரவந்ததோ?

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
செம்மை கொலுவிருக்கும்! - ஒளி
கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று
குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்
அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்
உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்
ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று
சேர்ந்த உடலுடையாள்! - கன்னி
மானமெனு மெழில் ஆடையணிந்து
மயக்கப் பிறந்தவளோ? - அட
நானு மிவளும் இருக்கு முலகிலே
நாணம் இருக்குமோடா? - நாங்கள்
வான மளவு பறந்துவிட் டோமிந்த
வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி
காட்டப் பறந்து வந்தாள்! - அந்த
நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி
நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு
வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்
வெள்ளை மனந் திறந்து... - புதுப்
பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்....

முழக்கம்

தடித்த சிங்களத்தின் தறுக்கனே! மூடா!
தமிழன்யான் உனைக்கண்டு தலைதாழ்த்தவோடா?
துடிப்புள்ள தமிழ்வீரர் தோள்வீரம் அறியாய்...
துள்ளுகின்றாயடா! நில்! எங்கள் மண்ணில்
வெடிக்கின்ற குண்டுக்கும் அசையாத வீரர்
விளைந்துள்ள காலம் நீ வி€ளாயடுகின்றாய்!
இடிக்கின்றாயா? சரி... இடித்துப்பார் என்றன்
எலும்போடு தசைமோதித் தமிழென்றே கூறும்!

செந்தமிழ்க் கனலூறி வளர்ந்த இம்மேனி
சிறுத்தையின் எழில்மேனி வளையுமோ கூனி?
மந்திரமான செந்தமிழோடு வாழ்ந்தோம்!
மலைமோதினாலும் நிலைதாழுவோமா?
தந்தை இராவணன் ஆண்ட பொன்னாடு!
தமிழீழ நாடென்றன் தாய்நாடு கண்டாய்!
இந்தமண் மீட்பதே என் முதல்வேலை!
ஏன் மோதினாய்? என்முன் நீ எந்த மூலை!

வெறியாடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!
விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!
பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!
பொன்னீழம் உயிரென்றோம்... போராடுகின்றோம்!
சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!
செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!
அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!
அந்நாள் உன்சிங்களம் பாடம் படிக்கும்!

நில்லா இம்மண்மிசை அநீதிகள் நில்லா!
நிறைவெறி யாளனே! நின்படை வெல்லா!
செல்லாதடா நின்றன் செருக்கிந்த நாட்டில்!
செந்தமிழன் கதை படித்துப்பார் ஏட்டில்!
எல்லார்க்கும் இம்மண்ணில் இடமுண்டு கண்டாய்!
எதிரியின் உடல்மட்டும் விழும்துண்டு துண்டாய்!
பொல்லார்க்குப் பொல்லாத நாடெங்கள் நாடு!
புரிந்து கொண்டாயா நீ இப்போதே ஓடு!

குயிலுக்கு வாழ்வு கொடு

இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?

நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?

உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?

உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!

நெருப்புப் பழம்

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

அன்னைத் தமிழ் ஈழம்
என்றன் உயிர்த்தாயகம்
தன்னை வென் தொட்டான்?
தமிழா எழுக! என
மின்னை இடியைப்
புயலைத் தமிழ்செய்தேன்...
என்னைக் கொடுங்கவிஞன்
என்றார் நிறையிட்டார்...

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

ஓங்கு நெடுமதில்கள்
உள்ளே இருட்கோலம்
தாங்க முடியா நோய்
தாகம் பசிக்கொடுமை
தீங்கு படைக்கும்
கொடியர் சிறைக்கோட்டம்
ஏங்கி ஒரு தமிழன்
இங்கு மடிகின்றேன்...

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

என்னே இவ்வையம்!
எனைப்போல் ஒரு மனிதன்
மண்ணாள இங்கே
வளைந்துயான் அம்மனிதன்
சொன்னடி கைகள்
கட்டித் தொழும்பியிற்றும்
பொண்ணைப் பயலானேன்...
போதும்! இதுபோதும்!

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

வானில் கிளி பறக்கும்...
வண்ணக் கொடிமுல்லை
தான் நினைந்த பக்கம்
தழுவிப் படர்ந்திருக்கும்
மாநிலத்தே யான்
அட! இம் மதில் நடுவில்
ஏனிப்படி இருந்தேன்?
என்ன பிழை செய்தேன்?

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

பட்டு நிலா வான்
மிசை எழப் பாரெங்கும்
கொட்டு முழவிசையில்
கூத்தாட வையத்தின்
எட்டுத் திசையும்
மகிழத் தமிழன்யான்
மட்டும் துயர் தாங்கி
மாளப் பிறந்தேனா?

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

"நானோ அடிமை?"
என நா விளிக்கிறது!
கூனோ டிருக்கும்
உடலம் கொதிக்கிறது!
தேனோ மரணம்
என நெஞ் சொலிக்கிறது!
ஏனோ விழியில்
இரத்தம் பனிக்கிறது

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

தம்பிகாள்!

வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம்
வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்!
தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே!
தெய்வம் உண்டு நம்புங்கள்!
பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்!
போர்க்களம் எமக்கென்ன புதிதோ?
குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்!
கூத்தாடுவோம்! இது பொன்னாள்!

எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள்
இருட்சிறை ஆடுதல் இன்பம்!
வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து
வெல்லுதல் விடுதலை கண்டீர்!
சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்!
செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ?
வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்!
வைர நெஞ்சங்களோ வாழி!

ஆழமா கடலின் அலைகளே இருங்கள்!
அறம் காத்தல் நம்கடன் அன்றோ?
கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம்
குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்!
ஈழமா மண்ணில் எழில் விடுதலை நாள்
இருத்தாமல் நாம் மடிவோமா?
ஊழையும் வெல்லும் உளங்களே! இருங்கள்!
ஒருபெருஞ் செயல் செயப் பிறந்தோம்!

கொள்ளையாம் வீரம் கொந்தளித்தாடும்
குட்டுவன் தமிழ்க்குலச் சேய்காள்!
உள்ளம் மகிழ இசை ஓதுமின்கள்!
உவகையில் ஆடிக் களிப்பீர்!
பிள்ளைகளா பெற்றாள்? எமைப் பெற்றாள்
பெருமைகள் அல்லவா பெற்றாள்?
வெள்ளம் படைப்போம்! புயல்படைப்போம்! நாம்
விடுதலை படைப்போம்! இருங்கள்!

நெடும்போர் ஆடும் நிமிர்ந்த உயிர்களே!
நெருப்பினில் பூத்த நெஞ்சங்காள்!
கொடுங்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்
குடியிருக்கும் உங்கள் அண்ணன்
இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!
இன்னுயிர்தான் விலை எனினும்
கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!
கூத்தாடுவேன் உடன்பிறப்பே!

கியூபா முழக்கம்

ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!

பண்டைத் தமிழன் காலின் சுவடுகள்
பைந்தமிழ் மண்ணில் அழிந்திடவில்லை!
அன்றைத் தமிழன் ஆடியகுளத்தில்
அலைகள் இன்னும் கலைந்திடவில்லை!

ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!

கோல வானைக் குருவி விழுங்குமோ?
கொடுவாய் முதலை விழுங்குமோ ஆற்றை?
ஈழ மண்ணை லங்கா விழுங்குமோ?
எங்கே பார்க்கலாம்...! என்னடா சேட்டை!

ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து

பாவி! நீ எம் மண்மிசை இந்நாள்
பாய்ச்சும் துப்பாக்கியின் கொடும் ரவைகள்
நீ அவை ரவைகள் என நினைத்தாலும்
நிச்சயம் அவைகள் சுதந்திர விதைகள்!

ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!

தமிழ் ஈழம் யாம் பெறுவது மெய்யே!
தகர்ந்து சிதறும் எதிரிகள் கையே!
தமிழர் நெஞ்சில் எரிவது நெருப்பே!
தமிழ் வீரம் தமிழர்கை இருப்பே!

ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!

குமுறல்

செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்....

சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?

ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

  • கவிஞர் : காசி ஆனந்தன்

நீங்களும் இரவும் நாங்களும்

 
ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும் வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.

பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி
எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய
காலங்கள் விலகிப்போக
எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப
எறிகணை செலுத்திகளை நகர்த்தும்
வாகங்களை செலுத்தும் வல்லமை பெற்ற
சகோதரிகளினுடைய சகோதரர்களே,
இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்
ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று
எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?
உங்களின் எழுதாத சட்டங்களைத்
தூக்கி எறிந்துவிட்டு
தயவு செய்து கவனியுங்கள்.
நாளைக்கு உங்கள் அக்கா
ஹையேஸ் செலுத்திச் செல்லக்கூடும்
உங்களது கடைசித் தங்கை
பஷனில் பறத்தல் நேரும்
கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்
மருமகள் பிறத்தல் ஆகும்.
தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்
பெறாமகள் இருத்தல் நிகழும்.
சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்
வேலையில்லா சிக்கலிற்குள்
சிக்காது உங்களது
புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்
கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்
உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப்
போகும் உங்களது
பேத்தியின் பெருமை காணும்
பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.

எமதருமை உறவுகளே
இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது
பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.
உறவுப் பெண்களாயிருந்தால் உந்துருளிகளிலும்
ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்
இடமிருந்த்தால் நிச்சயம் உதவுவார்கள்

நேற்றும் இன்றும் நாளையும்
ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்
இது
சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்

விடியும் வரை

அதிகம்

தேடல்