புகழ்பாடு

களமெனில் முழங்கிவரும் ஏறு! - தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! - தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு!

மானமே தமிழனுயிர் அங்கம்! - தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! - தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்

தமிழன் உடற்குருதி சூடு! - தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? - தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

நிலாவே!

நிலாவே! நீயேன் தமிழர் நிலமிசை
உலா வருகின்றாய்? ஓடிப் போய்விடு!

அடிமைச் சிறையின் இடையே அழுந்தி
துடியாய்த் தமிழன் துடித்து நலியும்

கண்ணீர் ஆற்றுக் காவிரி மண்ணில்
வெண்ணிலா உனக்கு விழல்உலா வேறா?

போ! போ! நிலாவே! போய்எங் கேனும்
வாழ்வுடை யோர்முன் வலம்வா! இங்கே...

ஒடிந்த தமிழன் உலர்ந்த தமிழன்
மடிந்து மடிந்து வாழும் தமிழன்

கண்ணில் நெருப்பு வார்க்காதே
மண்ணில் எங்கேனும் மறைந்துபோ நிலாவே!

தோழி

நானோர் கனாக்கண்டேன் தோழி! - தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! - அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! - இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! - தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!

ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!

வீண் சண்டை போட்டதும் இல்லை! - தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?

காதலர் வரவில்லை தோழி! - அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி - தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!

தழலிடு!

காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக்
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன்
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில்
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம்
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம்
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில்
இட்டவன் உடல்மேல் இடடா தழலை!

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள்
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! - தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!


முரசொலி

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள்
போம் போம் போமென முழங்கு முரசே!
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர்
யாம் யாம் யாமென முழங்கு முரசே!
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா?
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே!
அரசொடு தமிழன் ஆளமுழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தேச விடுதலை பாட முழங்கு!

தோழா!

என்னைப் போலொரு மானிடன் என்னை
எப்படித் தாழ்த்தலாம் தோழா? - அவன்
அன்னை போலவே என்னையும் அன்னை
ஆக்கினள் நானென்ன கீழா?

ஆணை செலுத்தவும் ஆளவும் இங்கே
ஆவி அவனெடுத்தானா? - பிச்சைப்
பானை ஏந்திய கையனாய் இந்தப்
பாவி பிறந்து வந்தேனா?

காற்று வானிலே சிட்டுக்கள் கண்டேன்....
களிப்பினில் என்னை மறந்தேன் - இன்பம்
ஏற்று மறுபொழு தென்கரம் பார்த்தேன்....
இருகை விலங்கோ டிருந்தேன்!

அஞ்சி நடுங்கியும் நெஞ்சம் பதைத்தும்
ஆயுள் கழிந்தது தோழா! - உயிர்
கொஞ்சம் இருந்தது.... கூறடா இந்தக்
கொடுமைக்கும் பேரென்ன ஊழா?

என்ன தமிழனோ? ஏன் பிறந்தேனோ?
என்னடா அடிமையின் வாழ்வு! - சீச்சீ
இன்னோர் மனிதனுக் கூழியஞ் செய்தேன்!
இருப்பதிலும் நன்று சாவு!

வீசுக புயலே

வீசுக புயலே! வீசுக புயலே!
விடுதலை உணர்வில் ஆடினர் தமிழர்!
வீசுக... வெள்ளம் விரைந்து வரட்டும்!
வெடித்துப் பாய்க! விண்ணை மோதுக!
வீசுக புயலே.... வீசுக நன்றாய்!
வெள்ளி வாளை விசிறி மின்னுக!
வீசுக சிறையின் வேலி விழட்டும்!
வெளுத்து வாங்குக! வெற்றி நமதே!

மண்ணைக் குடைந்தால் மணிகள் கிடைக்கும்!
மலையைக் குடைந்தால் வைரம் கிடைக்கும்!
விண்ணைக் குடைந்தால் நிலவு கிடைக்கும்!
வேறெது வேண்டும்? இங்குள மாற்றார்
கண்ணைக் குடைந்தால் விடிவு கிடைக்கும்!
கவிதை பாடவோர் வாய்ப்புக் கிடைக்கும்!
எண்ணிக் குடைந்து வீசுக புயலே!
எங்கள் விடுதலை இயக்கம் நீயே!

நாளை விடிந்தால் வேலை முடிந்தது!
நாடு பிறந்தது! வீசுக புயலே!
கோழையர் இல்லை தமிழக மண்ணில்!
குமுறி ஆடுக! ஆடுக பார்ப்போம்!
தோளை நிமிர்த்திய வீரர் துள்ளினார்!
தொல்லை மடிந்தது வீசுக புயலே!
வேளை மலர்ந்தது! வீசுக! வீசுக!
விளித்தது சங்கம் ஒலித்தது முரசே!

அட தமிழா!

ஏனடா... ஆண்டான்
புண்ணினை நக்கிப்
போட்டதை விழுங்கும்
உண்ணி நாயானாய்
ஒழிந்ததோ மானம்?
கண் சிவந்தோடிக்
களம் புக வாடா!

ஆண்டவன் அன்றோ?
அட தமிழா நீ
பாண்டியன் அன்றோ?
பாரடா உன்னை
ஈண்டு மாற்றார்கள்
எச்சிலால் வளர்த்தார்...
கூண்டினை நொறுக்கு!
குதியடா வெளியே!

உரிமை இழந்தாய்!
ஊழியஞ் செய்தாய்!
வரிகள் கொடுத்தாய்!
வளைந்து பிழைத்தாய்!
விரிபழம் புகழை
விற்றனை பாவி!
எரிமலை ஆகடா!
எழுக நீ எழுக!

தூக்கடா வாளை!
தோளை உயர்த்தடா!
தாக்கடா பகையை!
தலைகள் வீழ்த்தடா!
நீக்கடா தளையை!
நிமிர்ந்து நில்லடா!
ஆக்கடா கொற்றம்!
ஆளடா இன்றே!

தோழரே!

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

பட்ட நரம்பில்
பழையபடி செந்நீர்
சொட்ட உணர்ச்சி
சுரக்க விரைந்தோடி....

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மானம் உறங்கியது!
மான மறத்தமிழர்
தானை உறங்கியது!
தாவி விரைந்தோடி...

தட்டுங்கள் தோழரே தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

மணித் தமிழின் கண்ணீர்
மறைய உலகில்
தனித் தமிழன் ஆட்சி
தழைக்க விரைந்தோடி...

தட்டுங்கள் தோழரே! தட்டுங்கள் தோழரே!
தமிழர் நெஞ்சமெலாம் தட்டுங்கள் தோழரே!

தாவுவோம்!

பண்டை நாள் பகைமை கொண்ட நாடுகளை
வென்ற மானிடர்கள் வீழவோ....?
மண்டை ஓடுகளை நண்டின் ஓடுநிகர்
துண்டு செய்தவர்கள் தூங்கவோ?
சண்டையின் பெருமை கொண்ட தமிழர்கள்
கண்ட கண்டபடி சாகவோ?
குண்டை ஏந்தியெமை அண்டும் மாற்றானை
முண்டமாக்கி வர ஓடுவோம்!

குங்குமம் குருதி பொங்கிடத் தமிழன்
வெங்களச் செருவில் ஆடவும்
சிங்களப் பகைவர் கண்களைத் தமிழர்
தங்கொடித் திரைகள் மூடவும்
கங்கையின் வடவர் சங்கடப் படவும்
இங்கு வெம்பரணி பாடவும்
சங்கு கத்தியது! பொங்கு மாமறவர்
செங்களத்து மிசை தாவுவோம்!

தட்டுவோம் தோள்கள்! கொட்டுவோம் முரசு!
வெட்டுவோம் தளைகள் வெட்டுவோம்!
எட்டெனும் திசைகள் முற்றிலும் கொடியர்
வெற்றுடல் கால்கொண் டெற்றுவோம்!
கிட்டுவாள் இனிய வெற்றி மாமகளின்
ஒட்டிலே புகழை முட்டுவோம்!
பட்டிலே கொடிகள் வெட்டவான் வெளியில்
விட்டிசைகள் மிழற்றுவோம்!

விடியும் வரை

அதிகம்

தேடல்