பாவலரே!

பாவலரே! போலிகளாய்
இருக்கின்றீர்கள்!

கன்னி அருந்தமிழணங்கு
கையிரண்டில் விலங்குடையாள்
கண்ணீர் கண்டும்

செந்நெருப்பு விழிகொண்டு
சிறியெழ மாட்டீரோ?
சிச்சி! வானில்

புண்ணிருந்தாற் போலிருக்கும்
நிலாவினையும் காதலையும்
புனைகின்றீரே!

பொங்கு வெறித் தமிழ்கொண்டு
போர்க்களத்தே ஒளவையெனும்
பூவை அந்நாள்

செங்குருதி குளித்திருந்த
தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்
கவிதை ஆக்கிச்

சங்க மணித் தமிழ்தந்தாள்....
அட நீங்கள் தாய்த்தமிழை
மறந்து நாட்டில்

தெங்கிளநீர் முலைபாடித்
திரிகின்றீர்... கவிஞர்களா?
செத்துப் போங்கள்!

ஊர் பற்றி மொழி பற்றி
ஒரு பொழுதேனும் நீவிர்
உணர்கின்றீரா?

தீ பற்றி எரிகின்ற
வீட்டினிலே இசைபாடிச்
சிரிக்கின்றீர்கள்?

வாய்பற்றி எரியாதா?
தமிழன்னை மனம் நொந்து
வயிறெரிந்தால்

நீர்பற்றும் எழுத்தாணி
நொறுங்காதா? விளையாடல்
நிறுத்துமின்கள்!

சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்.... மாற்றார்

பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்... ஓடி

வில்லெடுத்து வேலெடுத்துத்
தமிழிளைஞர் வெளிக்கிளம்ப
நெருப்பு வீசும்

சொல்லெடுப்பீர்... பாவலரே!
இல்லையெனில் தொழில் விடுங்கள்
அதுவும் நன்றே!

பேயன்

அருவண்ணத் தமிழ் மண்ணில்
ஆரியனை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி ஆரியனின்
சூழ்ச்சிக்கே பலியானான்.....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

கருநெஞ்சன் வங்கத்தான்
கயவன் விசயனென்பான்
வருபோதில் இலங்கைமண்
வாசல் திறந்துவைத்த
உருகுவிழல் மனத்தமிழன்
ஒளிஈழம் பறிகொடுத்தான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அரு ஞாலத் திசையெல்லாம்
அங்கெல்லாம் இங்கெல்லாம்
கருகி உழைத்து வளம்
கனிவித்த உயர் தமிழன்
எருவாகிப் பிறன்வாழ்வை
எழிலாக்கித் தான் மாய்ந்தான்...

பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் சிங்களம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
ஒருநாடு தனக்கின்றி
ஊர் ஊராய் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்...
எருமை இவனை ஒருவன்
"ஏ! கள்ளத் தோணி" என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்.

குமுறி எழடா!

உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்...
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?

மேடைத் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந் நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!

எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங் கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்!
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.

போர்!

எழுந்தது தமிழன் தோள்!
இடிந்தது சிறையின் தாள்!
சுழன்றது மறவன் வாள்!
பிறந்தது தமிழர் நாள்!

திரிந்தது பொறிகொள் தேர்!
எரிந்தது பகைவன் ஊர்!
பொழிந்தது குருதி நீர்!
நிகழ்ந்தது தமிழன் போர்!

அதிர்ந்தது முழவின் தோல்!
அழிந்தது திசை ஓர் பால்
பறந்தது வெறியர் கோல்!
பிறந்தது புறப்பா நூல்!

குவிந்தது பகைவர் ஊன்!
மகிழ்ந்தது கழுகு தீன்!
நிமிர்ந்தது தமிழர் கூன்
பறந்தது புலிவில் மீன்!

வா தமிழா!

முறங்கொண்டு புலியடித்தாள்
முன்பொருத்தி! அவள் முலையில்
இறங்கிய பால் குடித்தவனின்
இனத்தோனே! அட தமிழா!
மறங்குன்றிப் பொதி சுமக்கும்
மாடானாய்.... சி! பகைவன்
புறங்காலை நக்குகிறாய்!
போடா போ! செத்துப் போ!

என்ன பிறப்போ? அட நீ
ஏன் தமிழன் எனும் பெயரை
உன்னுடலுக் கிட்டாயோ?
உண்மையில் நீ தமிழனோடா?
என்னருமைத் தமிழனெனில்
எழு! பகைவன் உடல்பொழியும்
செந்நதியில் ஆடி எழு!
சிவந்த விழி கொண்டெழடா!

கைநெடுவேற் படை எங்கே?
கணை எங்கே? வில்லெங்கே?
மை நெடுவான் வரையெழுந்த
தோள் எங்கே? மறமெங்கே?
ஐயிரண்டு திசை மோதி
அகன்ற தமிழ் மார்பெங்கே?
வையகமும் வானகமும்
நடுங்க வலம் வா தமிழா!

மூத்தகுடி இராவணனை
முழுதுலகும் புகழ் குவித்த
போர்த்தமிழர் தலைமகனைப்
புலிப்பிறப்பைத் தமிழீழம்
காத்த நெடுங் குன்றத்தைக்
களிகொள்ள நினைந்தொருகால்
ஆர்த்தெழடா தமிழ்மகனே!
அமையட்டும் தமிழரசு!

தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
தமிழென்றன் உடன் பிறப்பு!
தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!
தமிழென் நட்புடைத் தோழன்!
தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!
தமிழென் மாமணித் தேசம்!
தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்!
தமிழே என்னுயிர் மூலம்!

என்றன் தமிழுடல் எழவே எழுவான்
எழுதமிழ் வானின் பரிதி!
என்றன் தமிழ்மூச் சென்பது தமிழாம்
எறிவான் இடிபுயல்! அறிதி!
என்றன் தமிழ்நரம் பினிலே பாயும்
எரிதழல் ஆற்றுக் குருதி!
என்றன் தமிழை எவன் பழித்தாலும்
எமன் அவனைத் தொடல் உறுதி!

நான் தமிழனடா! நானொரு தமிழன்!
நாற்றிசையும் இது மொழிவன்!
நான் ஒரு வெறியன் என நகை செய்வோன்
நற்றமிழ் அறியான் இழிஞன்!
நான் உயர்தமிழின் வளமுணர் தமிழன்!
நந்தமிழ் எழயான் எழுவன்!
நான் இழிகழுதை அல்லன்.... வலியன்!
நானிலத்தீர்! இது தெளிமின்!

தமிழர் படை!

மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல
மானம் ஒன்றுதான் அடிப்படை!
வெறிகொள் தமிழர் புலிப்படை! - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை!

புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
புல்லர் போவார் சாக்களம்!
பதறிப் போகும் சிங்களம்! - கவி
பாடி முடிப்பான் மங்களம்!

தமிழன் பண்பில் உருப்படி! - அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி!
அமையும் தன்மை முதற்படி! - பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு! - நீ
வேங்கை; மாற்றான் வெள்ளாடு!
சிறும் பாம்பை வென்றாடு! - கண்
சிவந்து நின்று போராடு!

உயிரைத் தூக்கி எறி!

பொன்னால் ஆன தமிழைப்
பொருதும் உடலை முறி!
உன்னால் இயலா தெனில் உன்
உயிரைத் தூக்கி எறி!

மோதித் தமிழ்வாழ் வழிக்கும்
முரடன் உடலைச் சுடு!
நாதி இல்லை எனிலோ
நஞ்சைக் குடித்துப் படு!

பவளத் தமிழர் மண்ணை
பறிப்போன் உடலை மிதி!
அவனைக் கண்டஞ் சுவையேல்
ஆற்றிலேனும் குதி!

மறத்தின் தமிழர் மண்ணில்
மாற்றான் உடலைத் தொலை!
புறத்தில் ஒதுங்கு வாயேல்
போ! நீ செய் தற்கொலை!

களம் வருவோம்!

போர் முரசோடு புறப்படடா! தம்பி!
புல்லர்கள் காதில் அறைந்து வைப்போம்!
பேரரசொன்று படைத்திடு வோமென்று பேட்டைக்குப்
பேட்டை முழங்கி வைப்போம்!

ஆளுக் கொருவன் தலைபறிப்போம்! தம்பி!
அணுவணுவாய் அவன் உடல் முறிப்போம்!
நாளுக்கு நாள் தமிழ் நாட்டை அழிப்பவன்
நாடகம் ஓய ஓர் நாள் குறிப்போம்!

மானம் விழுந்து துடிக்குதடா! தம்பி!
மறவன் கதைகள் விளைந்த மண்ணில்
ஈனம் விளைந்து கிடக்குதடா! இதை
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?

துள்ளி எழுந்து புறப்படடா! தம்பி!
தூய தமிழ்ப்படை ஒன்றமைப்போம்!
எள்ளி நகைக்கும் பகைவன் உடல்களை
எண்பது துண்டுகளாக்கி வைப்போம்!

மூவர் தமிழ்ப்படை அஞ்சுவதோ? தம்பி!
மூலையில் நம்மவர் துஞ்சுவதோ?
சாவை எதிர்த்து வலம்வருவோம்! தமிழ்ச்
சாதி பிழைக்கப் புறப்படடா!

அந்நாள் எங்கே?

முடியோடு முன்னாளில்
மூவேந்தர் புகழோடு
முரசி னோடு

கொடியோடு மாற்றார்முன்
குனியாத மார்போடு
கொற்றத் தோடு

படையோடு தனியான
பண்போடு பிறநாடு
பார்த்துப் போற்றும்

நடையோடு பாராண்ட
தமிழா! உன் நாடெங்கே?
புகழேடெங்கே?

தரணிக்கோ உன்நாடு
தாய்நாடு! நீயோ பார்
பட்டாய் பாடு!

தெருவுக்கு வந்தாய் பார்!
தேகத்தை விற்றே தின்
றாய் சாப்பாடு!

மரபுக்கு மாறாக
மாற்றான் கால் ஏற்றாய்பார்!
கெட்டாய் கேடு!

பரணிக்குப் பொருள்தந்த
தமிழா! பாழடித்தாய் பார்
வரலாற்றேடு!

வஞ்சத்தால் தமிழ்மண்ணின்
வாழ்வுக்குத் தீ வைக்க
வருவோர் தம்மை

நஞ்சுண்ட கைவேலின்
நாவுக்குப் பலியாக்கி
நாடு காத்த

நெஞ்சங்கள் இன்றெங்கே?
தமிழ்மான நெற்காட்டில்
நெருஞ்சிப் பூண்டை

அஞ்சாமல் நட்டதார்?
தமிழா! உன் போர்வீரம்
அழிந்த தோடா?

வாள்தொட்ட கையெல்லாம்
வலிகுன்றிப் புகழ்குன்றி
மானம் குன்றிக்

கால்தொட்டு வாழ்கின்ற
கண்றாவிக் காலத்தைக்
கண்ணால் கண்டோம்...

பாழ்பட்ட இந்நாட்கள்
பலநாட்கள் ஆகாமல்
பார்த்துக் கொள்வோம்!

தோள்தட்டி மானத்தில்
தோய்கின்ற போராட்டம்
தொடங்கு வோமே!

விடியும் வரை

அதிகம்

தேடல்