எத்தனை பெரிய மனம் உனக்கு?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

ஏன் இந்த நடிப்பு?

கைதட்டத்தானா உன் கை? - தமிழா!
கைதட்டத்தானா உன் கை?

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்
முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு? - அட!
அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?

தமிழை கல்விமொழி ஆக்கு

தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!

எழுவாய் நீ நெருப்பாய்!

தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!

தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!

பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!

வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!

உணர்ச்சி

என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி

சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி

என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!

பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே

சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்... அட மாற்றார்

கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!

நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே

கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!

புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?

தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே?

தமிழீழத்தின் அழகு தனியழகு

தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள்
தாயகத்தின் பெருமை அறியும் உலகு

கடல் சூழ்ந்த யாழ்பாணம்
படகு போல் இருக்கும்!

கரை மணலில் நண்டு
ஏதேதோ கிறுக்கும்!

குடைபோலும் பனைமரம்
பார்ப்போரை மயக்கும்!

கொள்ளை அழகு என்று
உலகமே வியக்கும்!

கோணமா மலைமீதில்
அலை மோதிப் பாயும்!
கூட்டமாய் எழில் மான்கள்
கடலோரம் மேயும்!

தேன் நிலாக் காலத்தில்
கடலில் பொன் பூக்கும்!
தீந்தமிழ்ப் புலவன்கை
எழுதுகோல் தூக்கும்!

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

விழிகளில் வன்னி மண்
அழகள்ளிச் சொரியும்!

வேரில்லாச் செடியைப் போல்
மயிலாடித் திரியும்

எழில் தோய்ந்த மன்னாரில்
முத்துக்கள் கிடைக்கும்!

ஈழத்தின் திசை நான்கும்
ஓவியம் படைக்கும்!

மடிந்து போ!

தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!

பூத்தது விடுதலை!

புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!

பயணம்

நீல மலைக் குறிஞ்சி நிலம்.... முல்லைக்காடு
நெல் விளைந்த மருதம் அதை அடுத்தநெய்தல்

கோலிழந்த தமிழன்போல் இருந்த பாலை
கொண்டிருந்த வையத்தின் திசைகளெட்டும்

காலமுனி சொன்னதுபோல் அலைந்தலைந்து
கவிஞன் யான் பட்டதுயர் கொஞ்சமில்லை!

வேலெறிந்து விளையாடும் மறவர் கூட்டம்
விழி சிவந்த கதை தவிர வேறொன்றில்லை!

ஒன்றுபடு!

சாதி மதமெனும் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!
ஆதி மகளெனும் தமிழை அரசியாய்
ஆக்கி வாழவிடு!

கந்தன் பறையனென் றுரைக்கும் கயவனைக்
கண்ணீர் வர வதைப்பாய்!
இந்துவும் இஸ்லா மியனும் பொருதினால்
இருவரையும் உதைப்பாய்!

ஊருக்கூர் சண்டை தெருத்தெரு சண்டை
உருப்படு வோமோடா?
பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே
பத்துப் பிரிவோடா?

தேசம் பலவினும் வாழும் காக்கைக்குலம்
சிதைந்து பிரிவதில்லை!
பேசும் மொழியால் அவை ஒன்றுகூடும்
பெருமை நமக்கில்லை!

ஒன்று படடா தமிழா! உறுதுயர்
ஓடப் படை நடத்து!
வென்று புகழ்கொண்டு வாடா! விடுதலை
வேண்டும் தமிழனுக்கு!

விடியும் வரை

அதிகம்

தேடல்